This Article is From Aug 30, 2018

கேரளாவுக்கு வங்கி மற்றும் நிதி சார்ந்த நிவாரண உதவிகள் அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள கேரள மாநிலத்துக்கு, வங்கி மற்றும் நிதி சார்ந்த நிவாரண உதவிகள் என்னென்ன என்பது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது

கேரளாவுக்கு வங்கி மற்றும் நிதி சார்ந்த நிவாரண உதவிகள் அறிவிப்பு!
New Delhi:

வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள கேரள மாநிலத்துக்கு, வங்கி மற்றும் நிதி சார்ந்த நிவாரண உதவிகள் என்னென்ன என்பது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி சேவைகளுக்கான செயலாளர் ராஜீவ் குமார், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து, நிவாரண உதவிகள் குறித்து ட்வீட்டுகள் பதிவிட்டுள்ளார்.

அவர், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கேரள சகோதரர்கள், நிதி சார்ந்த பரிமாற்றம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனென்னறால், பாஸ்புக் நகல், வங்கி கணக்கின் ஸ்டேட்மன்ட், புதிய டெபிட் கார்டுகள், புதிய செக் புக் உள்ளிட்டவற்றுக்கு எந்த வித தொகையும் வசூலிக்கப்படாது’ என்றுள்ளார்.

அவர் தொடர்ந்து, ‘குறைந்தபட்ச பேலன்ஸ் வைத்திருக்காமல் இருந்தால், அதற்காக எந்தவித தொகையும் பிடித்தம் செய்யப்படாது. ஏடிம் மூலம் பணம் எடுப்பதற்கு எந்த வித பணப் பிடித்தமும் இருக்காது. ஏடிம் மூலம் பணம் எடுக்கும் அளவும் அதிகரிக்கப்படும். தற்காலிக வங்கி கிளைகள் மூலம் வங்கி நடவடிக்கைகள் முடுக்கிவிட்டப்படும். நகரும் ஏடிம் மெஷின்கள் ஆங்காங்கே நிறுவப்படும். கேரள மக்களின் வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர அரசு தரப்பு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் அடுத்தடுத்த ட்வீட்டுகளில், ‘வெள்ளத்தால் சேதாரமடைந்த ரூபாய் நோட்டுகளை அனைத்து வங்கிகளிலும் பெறப்படும். ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும் போது, கொடுக்கப்படும் நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படும். விவசாயத் துறை மற்றும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் உயிர்ப்பூட்டும் வகையில், புதிய கடன்கள் தருவது, வட்டி கட்டுவதில் காலக்கெடு நீட்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதேபோல, காப்பீட்டு நிறுவனங்களும் இந்த நேரத்தில் கேரள மக்களுக்கு கை கொடுக்கும். அனைத்து பொதுத் துறை மற்றும் தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களிடமும், சேதாரங்களை மதிப்பிடாமல் காப்பீட்டுத் தொகையை தருமாறு கூறியுள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

.