சில நாட்களுக்கு முன்னர் பாராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவும், டிரம்புக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைலைட்ஸ்
- வீடியோ பிரசாரத்தில் ஈடுபட்டார் ஒபாமா
- டிரம்புக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் ஒபாமா
- ஜோ பைடனுக்கு ஆதரவாக பேசியுள்ளார் ஒபாமா
அமெரிக்காவில் சீக்கிரமே அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு அரசியல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தற்போது அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபராக இருந்த ஜோ பைடன், இந்த முறை அதிபர் பதவிக்காக டிரம்பை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்கப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனுக்கும், துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். வீடியோ மூலம் ஒபாமா செய்த பிரசாரத்தில், டிரம்ப் மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
“ஒரு அதிபராக உழைப்பதில் டிரம்ப் ஆர்வம் காட்டவே இல்லை. அவருக்கு இருக்கும் உச்சபட்ச அதிகாரத்தை வைத்து யாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்றே நினைக்கவில்லை. அவரது நண்பர்களுக்கு மட்டுமே உதவிகள் புரிந்தார். இந்த அதிபர் பதவியையே அவர் ஒரு ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி போல நடத்தினார். அதன் மூலம் தன் மீது கவனம் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். அதைத்தான் அவர் விரும்புகிறார்” என்று அதிரடியாக பேசினார் ஒபாமா.
ஒபாமா, கடந்த காலங்களில் டிரம்ப் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் டிரம்ப், ஒபாமாவின் அரசியல் கொள்கைகள் மீதும் அரசியல் செயல்பாடுகள் மீதும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் பாராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவும், டிரம்புக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், “ஒரு அதிபராக இருக்கத் தகுதி இல்லாதவர் டிரம்ப்” என்று கடுகடுத்தார்.
பாராக் ஒபாமா, கொரோனா வைரஸ் காரணமாக 1,70,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்ததற்கும், பொருளாதார நெருக்கடிக்கும், வேலை இழப்புக்கும் டிரம்பின் அரசியல் செயலற்றத் தன்மைதான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“டிரம்ப் ஒரு பக்கம் இப்படி இருந்தால்… மறுபக்கம் பைடனும் கமலா ஹாரிஸும் இந்த நாட்டின் மக்களைப் பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் அக்கறை கொள்கிறார்கள். பைடன்தான், நான் அதிபராக இருந்தபோது என்னுடன் அனைத்துக் கடினமான நேரங்களிலும் உடனிருந்தார். அவர்தான் என்னை சிறந்த அதிபராக உருவெடுக்கச் செய்தார். நம் நாட்டை உயர்த்துவதற்கான அனைத்து அனுபவங்களும் அவரிடம் உள்ளது.
இந்த நாட்டின் அதிபரை, குடிமக்களாக இருக்கும் அனைவரும் சேர்ந்து தேர்வு செய்கின்றனர். ஆகவே, குறைந்தபட்சம் நாட்டில் உள்ள 33 கோடி மக்களின் பாதுகாப்புக்காகவும், நலத்துக்காகவும் அதிபர் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்… அப்படிப்பட்ட அதிபர், ஜனநாயகத்தைக் காப்பவராகவும் இருக்க வேண்டும். ஆனால், டிரம்பிடம் இதை எதையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் சக்தியை அவர்கள் பறிக்க அனுமதிக்காதீர்கள்.
உங்கள் ஜனநாயகத்தை மற்றவர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள். இந்த தேர்தலில் எப்படி நீங்கள் ஈடுபடப் போகிறீர்கள் என்பதை இப்போதே திட்டமிடுங்கள். வாக்களியுங்கள்” எனப் பேச்சை முடித்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)