This Article is From Jun 01, 2020

ஜூன் மாத ஊரடங்கிலாவது நோய்ப் பரவல் தடுப்பில் ஈடுபட வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

மக்களுக்கு எங்களால் எதுவும் தரமுடியாது, அதனால் தடைகளைத் தளர்த்துகிறோம், நீங்களே உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, கடமையிலிருந்து தன்னைக் கழற்றிக் கொண்டுள்ளார் முதலமைச்சர்.

Advertisement
தமிழ்நாடு Posted by

ஜூன் மாத ஊரடங்கிலாவது நோய்ப் பரவல் தடுப்பில் ஈடுபட வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

ஜூன் ஊரடங்கை விளம்பரத்திற்காக வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறோம் என்றால், தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்குத் தொற்று ஏற்பட்டது எப்படி? தினமும் 500 முதல் 1000-த்திற்கும் மேலான எண்ணிக்கையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதும் – நேற்றைய தினம் மட்டும் 1149 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதும் இந்தத் தமிழ்நாட்டில்தானே? தினமும் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில்தானே? 

‘மக்களைப் பாதுகாக்கிறோம்' என்று முதலமைச்சர் சொல்வது உண்மைக்கு மாறானது அல்லவா? அவருக்கே அது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இல்லையா? நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் இன்னமும் சிகிச்சை நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், ஏதோ இந்தியாவிலேயே இது இமாலயச் சாதனை என்பதைப் போல முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார். 

‘நம்மை விட பா.ஜ.க. ஆளும் குஜராத் நிலைமை படுமோசம்' என்று வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்! அப்படி பெருமை கொள்ளவும் அவரால் முடியாது; ‘குஜராத் முன்னாள் முதலமைச்சர்' கோபம் கொண்டாலும் கொள்ளுவார்!

Advertisement

‘உயிரிழப்புகள் குறைவு' என்று முதலமைச்சர் தனக்குத் தானே பெருமை பாராட்டிக் கொள்வது ஈவு இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடு! 173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல், இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரியுமானால், அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாகத் தாக்கியிருக்கிறது என்று பொருள்!

2020 ஜனவரி 7-ம் தேதியே கொரோனா பற்றி அறிந்திருந்தும், மார்ச் 7-ம் தேதியே முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டும், மார்ச் 24-ம் தேதி வரைக்கும் மாய்மாலங்களில் எடப்பாடி திரு. பழனிசாமி ஈடுபட்டதால் ஏற்பட்ட விபரீதம்தான், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தொட்டதும்; 173 உயிர்கள் பலியானதும். ஒரு தனிமனிதரின் ஆணவம், அலட்சியம், கையாலாகாத்தனம், பொறுப்பின்மைக்குத் தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய பெரிய விலையைக் கொடுத்துள்ளார்கள்!

Advertisement

“ஒரு லட்சம் மனுக்கள் தரவில்லை, 98,752 மனுதான் இருந்தன என்கிறார் ‘300 கோடி ரூபாய் ஊழல் மருத்துவமனை புகழ்' அமைச்சர் ஒருவர். ‘தமிழ்நாட்டில் பசி, பட்டினியே இல்லை' என்று முதலமைச்சர் சொல்கிறார். இத்தனை ஆயிரம் பேர் உணவுத் தேவைக்காக ஏன் மனுக் கொடுக்கிறார்கள்? எந்த லட்சணத்தில் அதிமுக ஆட்சி நடக்கிறது என்பது இதன் மூலமாக விளங்கவில்லையா?

‘மக்களுக்கு எங்களால் எதுவும் தரமுடியாது, அதனால் தடைகளைத் தளர்த்துகிறோம், நீங்களே உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' என்பதைச் சொல்லாமல் சொல்லி, கடமையிலிருந்து தன்னைக் கழற்றிக் கொண்டுள்ளார் முதலமைச்சர். இது ஆபத்தானது! மேலும் அதிகமான கொரோனா பரவலுக்கே வித்திடும்! “பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி” என்று தெரிந்தும், அதுபற்றி எதுவுமே முதல்வரின் அறிக்கையில் இல்லை.

Advertisement

ஆகவே, இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தை, “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்” விளம்பரத்திற்காக வீணடிக்காமல்; இந்த ஜூன் மாதத்தையாவது, உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement