மெக்சிகோவில் கரடியுடன் செல்ஃபி எடுக்கும் சுற்றுலாப் பயணியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது
ஹைலைட்ஸ்
- இந்த சம்பவம் மெக்சிகோ சிபின்க் பூங்காவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது
- கரடி அருகில் வந்தும் அசராத பெண்மணி
- ஆடாமல் அசையாமல் சிலை போல் நின்ற மற்ற சுற்றலாப் பயணிகள்
'இம்சை அரசன்' படத்தில் வருவது போன்று, கரடி ஒன்று சுற்றுலாப் பயணியை நெருங்கி, தோளின் மேல் முன்னங்கால்களை வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஒரு காட்சியில், வடிவேலு வேட்டைக்குச் செல்வார். அப்போது அவர் எதிரில் கரடி வந்து நிற்கும். வடிவேலு எய்யும் அம்புகளை அப்படியே கரடி கேட்ச் பிடித்து விடும். இந்தக் காட்சி அனைவரையும் வயிறுகுலுங்கச் சிரிக்க வைக்கும் விதத்தில் இருக்கும்.
இந்த நிலையில், உண்மையிலேயே ஒரு கரடி காட்டுப் பகுதியில் வந்த சுற்றுலாப் பயணிகளை நெருங்கி மிரட்டிய சம்பவம் வைரல் வீடியோவாக பரவி வருகிறது. அதன்படி, இந்த சம்பவம் மெக்சிகோவில் உள்ள சிபின்க் சுற்றுச்சூழல் பூங்காவில் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. மூன்று சுற்றுலாப் பயணிகள் அருகருகே நிற்க, அவர்கள் அருகில் கரடி சர்வ சாதாரணமாகச் சென்றது. கரடியை அருகில் பார்த்த சுற்றுலாப் பயணிகள் ஆடாமல் அசையாமல் அப்படியே நிற்கின்றனர்.
அதில் ஒரு பெண் அருகே சென்ற கரடி, அவரது தோள் மீது முன்னங்கால்களை வைத்து அப்படியே நின்றது. ஆனால், அதிலும் அசராத அந்தப் பெண்மணி, நைசாக தனது செல்போனை எடுத்து, கரடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.
பின்பு, மெதுவாக விலகிய கரடி, லேசாக அந்தப் பெண்ணின் கால்களை பிராண்ட முயற்சித்தது. ஆனால், அதற்குள் சுதாரித்துக் கொண்ட அப்பெண் உடனே நகர்ந்து சென்றார். இதனிடையே மற்ற இரண்டு சுற்றுலாப் பயணிகளும் ஆடாமல், அசையாமல் சிலை போல் இருக்கின்றனர். பின்னர், சில நிமிடங்களில் கரடி அங்கிருந்து அப்படியே நகர்ந்து சென்று விட்டது.
கரடி அருகில் வந்தும் கத்தாமல், ஓடாமல் அதனுடன் செஃல்பி எடுத்த பெண்ணைச் சமூகவலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை ஒன்றுக்கும் மேற்பட்டோர் தொலைவில் நின்று எடுத்துள்ளனர். இதனால் விதவிதமான கோணங்களில் இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன.
Click for more
trending news