This Article is From May 15, 2019

மம்தாவிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்: பாஜக நிர்வாகி பேட்டி!

நேற்றே அவரை ஜாமினில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 18 மணி நேரத்திற்கு பின்னர் இன்று காலை 9.30 மணிக்கே அவர் விடுவிக்கப்பட்டார்.

மம்தா மார்பிங் புகைப்படத்தை வெளியிட்டதாக கைதான பிரியங்கா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

New Delhi:

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கேலி செய்து பதிவிட்டதற்காக, கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, தான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்தஒரு தவறும் செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

மேற்குவங்கம் மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை கேலி செய்யும் விதமாக அவரது புகைப்படத்தை, அமெரிக்காவில் நடைபெற்ற மெட்காலா நிகழ்வில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்துடன் மார்பிங் செய்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவும் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை வெளியிட்டதாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை போலீசார் கடந்த வெள்ளியன்று கைது செய்து காவலில் அடைத்தனர். 

இதைத்தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு உச்சீநிதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

மேலும், மன்னிப்பு கோருவதில் எதுவும் சிரமம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியது. மற்றவர்களின் உரிமையை பாதிக்கும் போது, பேச்சு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், பிரியங்கா இன்று காலை 9.40 மணி அளவில் விடுவிக்கப்பட்டார் என மூத்த வழக்கறிஞர் நீராஜ் கிசான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்றே அவரை விடுவிக்க உத்தரவிட்ட நிலையில் ஏன் இன்று காலை வரை தாமதமானது என மேற்குவங்க அரசு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து இந்த வழக்கு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், சிறையில் இருந்த வெளியில் வந்த பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது, சிறையில் நான் துன்புறுத்தப்பட்டேன். சிறை கண்காணிப்பாளர்கள் என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டனர். எனக்கு ஜாமின் கிடைக்கும் வரை என்னை யாரிடமும் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. 5 நாட்களாக நான் யாரிடமும் எதுவும் பேசவில்லை. சிறைக்குள் தண்ணீர் பெரும் கஷ்டம். நாம் ஸ்வச் பாரத் (கிளின் இந்தியா) குறித்து பேசுகிறோம். ஆனால், சிறைக்குள் சுத்தம் என்பது கொஞ்சம் கூட இல்லை. 

மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது. நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்தஒரு தவறும் செய்யவில்லை. அந்த மார்பிங் செய்த புகைப்படத்தை பகிர்ந்த மற்றவர்களையும் ஏன் கைது செய்யவில்லை? என்னை மட்டும் கைது செய்தது ஏன்? எனது போனை பறித்துக்கொண்ட போலீசார், இனி இதுபோன்ற புகைப்படங்களை பகிற மாட்டேன் என்று என்னை கூற சொல்லி கட்டாயப்படுத்தினர். 

முன்னதாக, இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த பிரியங்கா சர்மாவின் தாயார், அனைவரையும்போல் என் மகளும் இதை ஷேர் செய்துள்ளார். ஆனால், அவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்துடன் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

.