மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து, ஒரு வார காலமாக நடந்த வந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளி ஒருவர் சமீபத்தில் இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த இளநிலை மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6வது நாளாக போராட்டம் நீடித்தது. சில தனியார் மருத்துவமனைகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயங்கவில்லை.
இதனிடையே, எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜூனியர் மருத்துவர்களை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி, உடனே பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். எனினும், மருத்துவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், 'தங்களுக்கு நியாம் வேண்டும்' என குரல் எழுப்பி, போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
தொடர்ந்து, மம்தா தங்களை மிரட்டும் தொனியில் பேசியதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்தனர். மம்தாவின் செயலை கண்டித்து 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், மேற்கு வங்க மருத்துவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், இது தேசிய போராட்டமாக மாறியது.
இதையடுத்து, மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மம்தா அழைப்பு விடுத்தார். ஆனால், முதல்வர் என்ஆர்எஸ் மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் நிபந்தனை விதித்தனர்.
இந்நிலையில், மேற்குவங்க மருத்துவர்களுக்கு ஆதரவாக நேற்று இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை அறிவித்தது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.
இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தையின்போது, அரசு மருத்துவமனைகளில் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை டாக்டர்கள் குழு எடுத்துரைத்தது. என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் மருத்துவரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு மம்தா பானர்ஜி, அச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட எந்த மருத்துவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக ஒரு போலீஸ் அதிகாரியை நியமிக்குமாறு காவல் ஆணையருக்கு மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மம்தாவின் வாக்குறுதிகளை ஏற்று, மேற்கு வங்காளத்தில் ஒரு வார காலமாக நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெற சம்மதிப்பதாக மருத்துவர்கள் குழு உறுதி அளித்தது.