This Article is From Jun 24, 2020

ஜூலை 31-ம் தேதி வரையில் மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு! மம்தா பானர்ஜி அதிரடி

மேற்கு வங்கத்தில் இன்று மட்டும் 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் குணம் அடைந்தவர்கள் உயிரிழப்புகளை  தவிர்த்து மாநிலத்தில் 4,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 591 ஆக இருக்கிறது.

ஜூலை 31-ம் தேதி வரையில் மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் நீட்டிப்பு! மம்தா பானர்ஜி அதிரடி

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பொது முடக்க நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஜூலை 31 வரை மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது
  • அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவில் அறிவிப்பை வெளியிட்டார் மம்தா
  • மற்ற சில மாநிலங்களும் பொது முடக்கத்தை நீட்டிக்கலாம் என தெரிகிறது
Kolkata:

எந்த  மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மேற்கு வங்கத்தில் பொது முடக்கம் ஜூலை  31-ம்தேதி வரை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா பாதிப்பு,  தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து  விரிவாக விவாதிக்கப்பட்டது. 3 மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில், மாநிலத்தில் பொது முடக்கத்தை ஜூலை 31ம்தேதி வரையில் நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி  அறிவிப்பை வெளியிட்டார்.  அதே நேரத்தில் சில தளர்வுகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இன்று மட்டும் 445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,173 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் குணம் அடைந்தவர்கள் உயிரிழப்புகளை  தவிர்த்து மாநிலத்தில் 4,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 591 ஆக இருக்கிறது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று மற்ற கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதை ஏற்றுக் கொண்ட மம்தா, இந்த பிரச்னையை எதிர்கொள்வது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா பாதிப்புக்கு ஆகும் செலவுகளின் உச்ச வரம்பை அரசு விரைவில் நிர்ணயிக்கும் என்றும் அவர் கூறினார். அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது பேசிய மம்தா, அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்றும், அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு போராடி கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.  எனவே பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு 67 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் மொத்தம் 33 பேர் உயிரிழந்தனர்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 2,424 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து  குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது.
 

.