மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி NRC-க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். (File)
Kolkata: ‘தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்' என கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு வலுத்துள்ள எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த சட்டங்களுக்கு எதிராக, விளம்பரங்களை ஒளிப்பரப்பியதாக மேற்குவங்க அரசுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை வெளியேற்ற உதவும் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் முதலில் அசாமில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக அமைச்சர்கள் கூறி வந்த நிலையில், மேற்குவங்கத்தில் இந்த சட்டங்களை அமல்படுத்தமாட்டோம் என்று அம்மாநில முதல்வர் மம்தா கூறினார்.
மேற்குவங்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிஷோர் தத்தா கூறும்போது, அந்த விளம்பரங்கள் ஒளிப்பரப்பப்படுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். எனினும், மனுதாரர் இன்னும் அந்த விளம்பரங்கள் மேற்குவங்க காவல்துறையினரின் வலைபக்கத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, இந்த வழக்கை ஜன.9ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக கொல்கத்தாவில் பாஜக மாபெரும் பேரணியை நடத்த உள்ள நிலையில், நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மாபெரும் பேரணியில் கலந்துகொள்வதற்காக பாஜக எம்.பி ஜெ.பி.நட்டா இன்று பிற்பகல் கொல்கத்தா வருகை தந்துள்ளார்.
நான் பேசியவை அனைத்தும் பொதுவெளியிலே, அதனால், நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு மக்களே தீர்ப்பளிக்க வேண்டும். பிரதமருக்கு முரண்பாடாக பொதுவெளியிலே உள்துறை அமைச்சர் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து கருத்தது தெரிவிக்கிறார். இதிலிருந்து இந்தியாவின் அடிப்படை கருத்தை யார் பிரிக்கிறார்கள்? யார் சரி, யார் தவறு என்பதை மக்கள் நீச்சயம் தீர்மானிப்பார்கள் என்று மம்தா தெரிவித்திருந்தார்.