This Article is From Dec 17, 2019

குடியுரிமை சட்ட எதிர்ப்பால் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நிறுத்தம்!!

எந்த வகையிலும் குடிமக்கள் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று மேற்கு வங்கம் உள்பட 3 மாநிலங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு.

குடியுரிமை சட்ட எதிர்ப்பால் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நிறுத்தம்!!

குடிமக்கள் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னோட்டமாக NRC எனப்படும் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

New Delhi:

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் (NRC) மேற்கு வங்கத்தில் இன்று மாலைமுதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த விவகாரம் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது பிணத்தின் மீதுதான், மாநிலத்தில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நடக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு வங்க தலைமை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான அனைத்துப் பணிகளும் மேற்கு வங்கத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேற்கு வங்க அரசின் உத்தரவின்றி இது தொடர்பாக எந்த பணிகளும் நடைபெறக் கூடாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னோட்டமாக தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு இத்தகைய உத்தரவை மேற்கு வங்க அரசு பிறப்பித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை என்ன ஆனாலும் நிறைவேற்ற விட மாட்டோம் என்று 3 மாநிலங்கள் இதுவரை அறிவித்துள்ளன. அவற்றில் மேற்கு வங்கமும் ஒன்று. 

முதன்முறையாக தேசிய குடிமக்கள் பதிவேடு, அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதனை நாடு முழுவதும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை சட்டம் குடியுரிமையை வழங்க வழி செய்கிறது. இதனைக் கண்டித்து மம்தா தலைமையில் இன்று கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. 

இது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவ உரிமையை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

இன்றைய கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'நான் உயிருடன் இருக்கும் வரையில் குடியுரிமை சட்டத்தையோ, அல்லது தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ மாநிலத்தில் நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன். எனது அரசை நீங்கள் டிஸ்மிஸ் செய்யலாம். அல்லது என்னை சிறையில் தள்ளலாம். இருப்பினும் இந்த கருப்புச் சட்டத்தை நான் நிறைவேற்ற மாட்டேன். இவற்றை நிறைவேற்ற விரும்பினால் எனது பிணத்தின் மீது செய்து முடியுங்கள்' என்று கடுமையாக பேசினார். 

.