சர்ச்சைக்குரிய முகநூல் பதிவால் பெங்களூரில் பெரும் வன்முறை!
Bengaluru: காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் பதிவிட்டதாக கூறப்படும் முகநூல் பதிவால் நேற்றிரவு பெங்களூரின் கிழக்கு பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, போராட்டக்காரர்கள் எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் முர்த்தியின் வீட்டை சுற்றி முற்றுகையிட்டதோடு, பல வாகனங்களுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
இந்த கலவரத்திற்கு காரணமாக சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை பதிவிட்டவரை போலீசர் கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரை தாக்கியது, கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது, வன்முறையில் ஈடுபட்டது என 110 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பெங்களூர் போலீசார் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, டிஜி ஹாலி மற்றும் கேஜி ஹாலி பகுதியில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகைக்குண்டுகளை பயன்படுத்தியும் கலைத்தனர்.
தொடர்ந்து, காவல் ஆணையரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார். இதனால், பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்கள் அமைதி காக்க வேண்டி எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து, கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கலவரம் மற்றும் தீ வைப்பு சம்பவங்களை கண்டித்த அவர், கூடுதல் போலீஸ் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாகவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவும் மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், எம்எல்ஏ ஸ்ரீநிவாஸ் வீடு மற்றும் பைர்சாண்ட்ரா காவல் நிலையம் ஆகியவற்றின் மீதான தாக்குதலுக்கு பின்னர் புலகேஷினகரில் மோசமான நிலைமை ஏற்பட்டது.
எந்த ஆத்திரமூட்டும் விஷயமாக இருந்தாலும், மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.