பேய் போல் வேடமிட்டு இருசக்கர வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் இளைஞர்கள்
Bengaluru: பெங்களூருவில் நள்ளிரவில் வெள்ளை உடை அணிந்து பேய் வேடமிட்டு வாகன ஓட்டிகளை பயமுறுத்திய யூ ட்யூப் குழுவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் வெள்ளை உடையில் ரத்தக் கறையுடன் பேய் போல் வேடமிட்டு மக்களை பயமுறுத்தி அவர்களின் ரியாக்ஷனை பதிவு செய்ய முயன்றனர்.
இளைஞர்கள் செய்யும் சேட்டைகளின் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன. இந்த வீடியோக்கள் வைரலானது. பேய் போல வேஷமிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை நோக்கி ஓடுவதை காணலாம். யஷ்வந்த்பூர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளையும் சாலையில் நடந்து சென்றவர்களையும் இளைஞர்களும் அவரது நண்பர்களும் பயமுறுத்தினர்.
பலரும் பயந்து ஓடியதில் கீழே விழுந்து காயமும் அடைந்துள்ளனர். சாலையோரம் படுத்திருந்தவர்களையும் பயமுறுத்த திடுக்கிட்டு எழுந்தவர்கள், அலறிக்கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.
அங்கிருந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இளைஞர்கள் தங்களின் யூ ட்யூப் சேனலான “குக்கி பீடியா”வின் நகைச்சுவையான வீடியோக்களை உருவாக்கவே இதை செய்ததாக கூறியுள்ளனர்.
யூடியூப் பிராங்க் ஷோ குழுவினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 503, 268, 141 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து ஷான் மாலிக் (22), நவீத் (21), சாகிப் (20), சையத் நபில் (21), யூசிப் அகமது (22), சஜில் முகமது (21), முகமது அயூப் (20) ஆகிய 7 பேரையும் கைது செய்துள்ளனர். இருவர் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.