பெண் அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில், துணை பொது மேலாளர் மற்றும் அவருடன் வேலை செய்யும் 6 சக அதிகாரிகள் அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார். (Representational)
Hyderabad: பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தை சேர்ந்த 33 வயது பெண் அதிகாரி ஒருவர் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் 6 சக ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாலர் வெங்கடேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள பெல் நிறுவனத்தில் கணக்கு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
33 வயதான இவர் நேற்று காலை 10.30 மணி அளவில் வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார் என்றார்.
மேலும் தற்கொலை செய்துகொண்ட பெண் அதிகாரி ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், துணை பொது மேலாளர் (நிதி) மற்றும் அவருடன் வேலை செய்யும் 6 சக அதிகாரிகள் அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் தனது மொபைல் போனை ஹேக் செய்து தனது மொபைலில் வரும் போன் அழைப்புகளை வைத்து மிரட்டி தன்னை துன்புறுத்தியதாகவும், அவர்களில் சிலர் பாலியல் தொந்தரவும் செய்ததாக.குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருவதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.