This Article is From Jan 17, 2020

டெல்லி ஜாமா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத் மீண்டும் போராட்டம்!!

பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத் கடந்த டிசம்பர் 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி ஜாமா மசூதியில் போராட்டம் நடத்திய காரணத்தால் அவர் மீது போலீஸ் நடவடிக்கை பாய்ந்தது.

இன்றிரவு 9 மணிக்குள் பீம் ஆர்மியின் தலைவர் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கடந்த டிசம்பர் 21-ம்தேதி சந்திர சேகர ஆசாத் கைது செய்யப்பட்டிருந்தார்
  • வன்முறையை தூண்டியதாக பீம் ஆர்மியின் தலைவர் மீது குற்றச்சாட்டு உள்ளது
  • இன்று கோயிலுக்கு சென்ற ஆசாத் சீக்கிய குருத்வாராக்கு செல்லவிருந்தார்
New Delhi:

டெல்லி ஜாமா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளார். அவர் டெல்லியை விட்டு இன்றிரவு 9 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ள சூழலில் அவர் மீண்டும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த டிசம்பர் 21-ம்தேதி டெல்லி ஜாமா மசூதியில் சந்திர சேகர ஆசாத் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று காலையில் கோயிலுக்கு சென்ற அவர், பின்னர் டெல்லியில் உள்ள சீக்கிய கோயிலான பங்களா சாஹிப் குருத்வாரா மற்றும் சர்ச் ஆகியவற்றுக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தார். அவர் இன்றிரவு 9 மணிக்குள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக அவர் ஊடகத்தினரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டெல்லி ஜாமா மசூதி போராட்ட வழக்கில் சந்திர சேகர ஆசாதுக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது. அதன்படி அவர், 4 வாரங்களுக்கு டெல்லியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.

ஜாமீன் உத்தரவில், ரவிந்திரநாத் தாகூரின் கருத்தை கோடிட்டு காட்டியுள்ள டெல்லி நீதிபதி, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைத்து தரப்பினருக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார். இதனை அரசுகள் தடுக்க கூடாது என்றும் கூறியிருந்தார்.

 கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவு, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உரிமை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், வன்முறையை தூண்டியதாக சந்திர சேகர ஆசாத் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

நீதிபதி தனது உத்தரவில், ‘கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் கருத்து ஒன்றினை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். அது இன்றைய நேரத்திற்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. பிரிட்டிஷார் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்தனர். அதனை உணர்ந்த கவிஞர் ரவிந்திரநாத் தாகூர், மக்கள் மனதில் அச்சமே இல்லாத, அனைத்து தரப்பு மக்களும் கல்வியை அடையக் கூடிய நாடு அமைய வேண்டும் என்று கூறினார்' என்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ரவிந்திர நாத் தாகூர், நாட்டு மக்கள் அனைவரும் நேர்மையாகவும், சிந்தனை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்பினார். நம்முடைய அரசியலமைப்பு முறைப்படி, நாம் அனைவருக்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. இதனை அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கிறது இதனை எந்த அரசாலும் தடை செய்ய முடியாது என்று நீதிபதி கூறியிருந்தார்.

‘அதே நேரத்தில் நமக்கு சில கடமைகளையும் அரசியலமைப்பு சட்டம் விதித்திருக்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தும்போது, மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க கூடாது. இதனை போராடுபவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பது கடமை'  என்றும் நீதிபதி வலியுறுத்தியிருந்தார்.

‘வன்முறையில் ஈடுபட்டதாகவோ, அதனை தூண்டும் வகையில் பேசியதாகவோ ஆசாதுக்கு எதிரான ஆதாரம் இல்லை. அவர் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்திருக்கிறார். அது புனிதம் மிக்க ஆவணம்' என்று கூறி நீதிபதி ஆசாதுக்கு ஜாமீன் வழங்கியிருந்தார்.

.