இன்று காலை டெல்லி ஜாமா மசூதியில் வைத்து சந்திர சேகர ஆசாத் கைது செய்யப்பட்டார்.
New Delhi: பீம் ஆர்மியின் தலைவர் சந்திர சேகர ஆசாத்துக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்ப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அவர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையில், அவர் மீது சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது.
இன்று மாலை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சந்திர சேகர ஆசாத் நிறுத்தப்பட்டார். அப்போது அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயிரக்கணக்கானோரை வன்முறைக்கு தூண்டியதாக அவர் மீது போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கேமரா முன்னிலையில் சந்திர சேகர ஆசாத் விசாரிக்கப்பட்டார். நீதிமன்ற அறைக்குள் ஊடகங்கள் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பழைய டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 31 வயதான பீம் ஆர்மியின் தலைவர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆசாத் உயிருடன் இருக்க வேண்டுமா அல்லது உயிரிழக்க வேண்டுமா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
வெள்ளிக்கிழமையன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு போலீசார் ஆசாதிற்கு அனுமதி அளிக்கவில்லை. அவர் ஜாமா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரையில் செல்வதாக அறிவித்திருந்தார். தனது பெயர் சந்திர சேகர் ஆசாத் என்று குறிப்பிட்ட அவர் தன்னை போலீசார் பிணைக் கைதியாக வைத்திருக்க முடியாது என்று எச்சரித்தார். தலையில் தொப்பியும், சால்வையும் அணிந்து தன்னால் எளிதாக மசூதிக்குள் செல்ல முடியும் என்று அவர் பேசினார்.
அவரை கைது செய்வதற்கு முன்பாக அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், ஜாமா மசூதி முன்பாக நின்று போராட்டம் நடத்தினர். போலீசார் உள்ளே நுழைவதை அவர்கள் தடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
தர்யாகஞ்ச் பகுதியில் நடந்த வன்முறையில் 36 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 8 பேர் போலீசார் ஆவர். தனியார் கார் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
குடியுரிமை சட்ட திருத்தமானது முதன்முறையாக மத அடிப்படையில் இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வரும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இது முஸ்லிம்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளதென்றும் கூறி போராட்டங்கள் நடந்து வருகின்றன.