Bhogi Pongal: "அண்ணா சாலையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் பிஎம் 2.5 722-ஐத் தொட்டது"
Bhogi Pongal: தமிழர் திருநாளான பொங்கல், நாளை கொண்டாடப்படுகிறது. பெரும் பொங்கலைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கள் பண்டிகைகள் கொண்டாடப்படும். பொங்கலின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற வாசகத்துக்கு ஏற்ப இன்றைய நாள் தமிழர்கள், வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து பொங்கலைக் கொண்டாடுவார்கள்.
சுற்றுச்சூழலுக்குப் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை கொளுத்தி, போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதால் பிரச்னை இல்லை. ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள், அதிக புகை ஏற்படுத்தும் கழிவுப் பொருட்களை கொளுத்துவதால் சூழல் மாசு அதிகரிக்கிறது. அப்படி இன்று சென்னையில் கொண்டாடப்பட்ட போகிப் பண்டிகையால், காற்று மாசு மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. உலகிலேயே மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரமாக சென்னை இன்று உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரபல வானிலை வல்லுநர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான், “இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உலகிலேயே சென்னைதான் மிக மோசமாக காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுவை அளவிட பயன்படும் பிஎம் 2.5 அளவு மணலியில் 795-ஐத் தொட்டது. அண்ணா சாலையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் பிஎம் 2.5 722-ஐத் தொட்டது.
நாள் செல்ல செல்ல, சுற்றுச்சூழல் காற்று தேறிவிடும். இன்று சென்னையில் காற்று சுழற்சி மிகக் குறைவாக இருப்பதும் காற்று மாசு அதிக நேரம் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.