Cyclone Fani: பிஜ்ஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை கடுமையாக சேதமடைந்தது.
Bhubaneswar: ஒடிசாவை(Odisha) புரட்டிப்போட்ட ஃபனி புயலால்(Cyclone Fani), ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், உள்ள பிஜ்ஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரையும் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், விமான நிலையம் கடும் சேதமடைந்துள்ளது. அடித்த காற்றில், விமான நிலையத்தின் பெயர் பலகைகள் கூட பறந்துள்ளது.
விமான நிலையத்தின் மேற்கூரையும் பலத்த சேதமடைந்துள்ளது, இதேபோல், அங்கிருந்த மரங்கள் அனைத்தும் சரிந்துள்ளன.
ஒடிசாவில் நேற்று புயல் கரையை கடக்க இருந்த நிலையில், அங்கு நேற்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதேபோல், 160க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இன்று பிற்பகல் முதல் மீண்டும் விமான சேவைகள் புவனேஸ்வரில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் ஏற்பட்ட புயலில், புரி மற்றும் புவனேஸ்வர் மாவட்டத்திலே கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதேபோல், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மேற்கூரையும் பலத்த காற்றில் பறந்தது. 250 அடி ராட்சத கிரேன் ஒன்று கட்டிடங்களின் மீது விழுந்து பலத்த சேத்ததை ஏற்படுத்தியது.
மேலும், புவனேஸ்வர் பகுதி மக்கள் கூறும்போது, புயல் கரையை கடக்கும் போது, தங்களது வீடுகள் அதிர்ந்ததாகவும், இதனால் உடனடியாக அனைவரும் சாலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.