ஹைலைட்ஸ்
- இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்
- வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு பிரசாரம் செய்து வருகிறது போலீஸ்
- கொலை செய்யப்பட்டவர் ஒரு மென்பொறியாளர் ஆவார்
Murki/Mumbai: கர்நாடக மாநிலத்தின் முர்கியில் சில வாரங்களுக்கு முன்னர் குழந்தை கடத்தல்காரர்கள் என்று காரில் வந்த 5 நபர்களை தாக்கினர் உள்ளூர் மக்கள். இந்தத் தாக்குதலில் மென்பொறியாளரான முகமது அஸாம் உயிரிழந்தார். சம்பவம் இடத்துக்குப் போன போலீஸாரும் தாக்கப்பட்டர். இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல பகீர் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
கடந்த ஜூலை 13 ஆம் தேதி, ஆக்ஸஞ்சர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வரும் முகமது அஸாம், அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் 5 பேருடன் ஐதராபாத்திலிருந்து கர்நாடகாவின் முர்கிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு கூடியிருந்த சிறுவர்கள் சிலரிடத்தில் சாக்லெட்டுகளை அவர்கள் கொடுத்துள்ளனர். அந்த நேரத்தில் இவர்கள் குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகப்பட்ட ஊர் மக்கள், விறுவிறுவென வந்து காரின் டயரில் இருக்கும் காற்றை இறக்கவிடத் தொடங்கினர்.
‘எதற்காக காற்றை இறக்கவிடுகிறீர்கள்?’ என்று சம்பவத்தின்போது தாக்குதலுக்கு உள்ளான முகமது அஃப்ரோஸ் கேட்டுள்ளார். அதற்கு உள்ளூர் கும்பல், ‘நீங்கள் குழந்தை கடத்தல்காரர்கள்’ என்று சத்தம் போட்டுள்ளனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த ஐவரும், அங்கிருந்து காரை எடுத்து சட்டென புறப்பட முயன்றுள்ளனர். ஆனால், அருகிலிருந்த பாலத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், கார் கவிழ்ந்துள்ளது. அப்போது, கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்கள், தொடர்ந்து வாகனத்துக்கு உள்ளே இருந்தவர்களை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, 8 போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றுள்ளனர். போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர் உள்ளூர் மக்கள். இந்தத் தாக்குதலில் தான் முகமது அஸாம் உயிரிழந்தார். போலீஸாரும் மற்ற நால்வரும் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை 30 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது போலீஸ். ஆனால், யார் மீதும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கைது நடவடிக்கையால் முர்கி கிராமத்தில் மக்கள் பயத்தில் உள்ளனர். ஜூலை 13 சம்பவம் குறித்து பேசவே அவர்கள் அஞ்சுகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவில், இதைப் போன்ற 70 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 30 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து இந்தப் பிரச்னை இந்திய அளவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், எதிர்கட்சிகள் அரசின் செயலற்றத் தன்மையை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் அரசுத் தரப்பு, வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரபரப்படும் வதந்தி செய்திகள்தான் இதைப் போன்ற இறப்புகள் நடக்கக் காரணமாக அமைகின்றது என்று விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வாட்ஸ்அப் நிறுவனத்திடமும் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கு வாட்ஸ்அப் நிறுவனம், ‘ஒரு செய்தியை எத்தனை பேருக்கு அனுப்பலாம் என்பதை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வதந்தி செய்திகளை முடக்கும் வகையிலும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்’ என்றுள்ளது. ஆனால், சரியாக இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து தெளிவு இல்லை.
‘இந்தியாவில் ஏற்கெனவே மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் கொதிப்பான நிலை இருக்கிறது. இதில் வாட்ஸ்அப் போன்ற ஒரு சமூக வலைதளமும் சேர்ந்துவிட்டால், அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது’ என்று தெலுங்கானாவின் எஸ்.பி. ராஜேஷ்வரி பிரச்னையின் வீரியத்தைக் குறித்து விளக்குகிறார். மேலும் அவர், ‘மக்களுக்கு படிக்கவோ எழுதவோ தெரியாது. ஆனால், ஒரு போட்டைவைப் பார்த்து புரிந்து கொள்வதோ, வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்வதோ சுலபம்’ என்றார்.
முர்கியிலோ அல்லது முர்கியைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ குழந்தை கடத்தல்களுக்கான தரவுகள் இல்லை. ஆனால், 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 250,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது பிரச்னையில் வீரியத்தை சுட்டிக் காட்டுகிறது.
இந்த சம்பவத்தைக் குறித்து முர்கியில் வசித்து வரும் விஜய் பிடார், ‘அன்று நடந்தது மிகப் பெரிய தவறு. மக்கள் தவறிழைத்துவிட்டனர். ஆனால், அஸாமின் முகத்தைப் பார்த்தீர்களா? அவரின் பெரிய தாடியைப் பார்த்தீர்களா? அவர் தீவிரவாதியைப் போலவே இருந்தார்’ என்று திடுக்கிடும் கருத்தைக் கூறினார்.