This Article is From Jul 10, 2020

தமிழகத்தில் கொரோனா: சென்னையில் குறைகிறது… மதுரையில் 5 மடங்கு அதிகரித்துள்ளது!- விரிவான அலசல்

Coronavirus: தமிழகத்தில் நேற்று 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா: சென்னையில் குறைகிறது… மதுரையில் 5 மடங்கு அதிகரித்துள்ளது!- விரிவான அலசல்

Coronavirus: இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 78,161 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்..

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • மதுரையில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது
  • தற்போது மதுரையில் 5,299 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.
Chennai:

இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக திகழ்கிறது தமிழகம். மாநிலத்திலேயே தலைநகர் சென்னையில்தான் பாதிப்பானது மிக அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் தினமும் 2,000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது 1,200 வாக்கில் உள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது.  

மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை, 5 மடங்காக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. அதாவது ஜூன் 23 ஆம் தேதி மதுரையில் 988 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அங்கு 5,299 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 

இந்தக் காலக்கட்டத்தில், சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளன. தற்போது திருவள்ளூரில் 5,877 ஆக்டிவ் கேஸ்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,386 ஆக்டிவ் கேஸ்களும் உள்ளன. 

தற்போதைய நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத் துறை செயலர், ஜெ.ராதாகிருஷ்ணன், “நாங்கள் மதுரைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ராமநாதபுரம், விருதுநகர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அந்தப் பகுதிகளிலும் நிலைமை குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம்” என்கிறார்.

சென்னையில் தெருவுக்கு தெரு சோதனை செய்யப்பட்டு, கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த உத்தியை மதுரையில் உள்ள நகர குடிசைப் பகுதிகளிலும் சுகாதாரத் துறை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. 

சென்னையில் சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதால், பலரும் தென் மாவட்டங்களுக்குச் சென்றனர். இதுவும் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காரணமாக அமைந்துவிட்டது. 

அதேபோல சென்னையில் செய்வது போல, மற்ற மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாடும் உள்ளது. 

தமிழகத்தில் நேற்று 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,216 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,26,581 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,994 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 78,161 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,652 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,765 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 
 

.