Foreign Direct Investment in India: நேரடி அந்நிய முதலீட்டிற்கான விதிமுறைகள் தளர்வு
New Delhi: சரிவடைந்துள்ள பொருளாதார நிலையை சீராக்க, நிலக்கரி சுரங்கம், டிஜிட்டல் மீடியா துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நேரடி அந்நிய முதலீட்டிற்கான (FDI) விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது,
இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பை நாங்கள் காண்கிறோம், என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேர் தெரிவித்தார்.
தொடர்ந்து, பேசிய பியூஷ் கோயல், கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் நேரடி அந்நிய முதலீடு காணப்பட்டது. இதனால் தொடர்ந்து, அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது தற்போதைய சூழலில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும்.
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதன் மூலம், பெரும் நிறுவனங்கள் "ஒரு செங்கல் மற்றும் மோட்டார் கடையை நிறுவுவதற்கு முன்பு ஆன்லைனில் சில்லறை விற்பனையைத் தொடங்க முடியும்". இது ஐகியா போன்ற நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, நிலக்கரி சுரங்கம் அமைக்க நூறு சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், டிஜிட்டல் மீடியா துறையிலும் அரசு அனுமதியுடன் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஆர்பிஐ வசம் உள்ள ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதியில் இருந்து 14 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்க வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தக் குழு தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அந்த அறிக்கையில், மத்திய அரசுக்கு 3 முதல் 5 ஆண்டுகளில் தவணை முறையாக உபரி நிதியை வழங்க பரிந்துரைத்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் கூடிய ஆர்பிஐ மத்தியக் குழுக் கூட்டத்தில் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் பேரில், நிதியாண்டு 2018-19ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள நிதியில் 1,23,414 கோடியும் மேலும் மறு பொருளாதார முதலீடு வரைவில் (இசிஎப்) கூடுதலாக உள்ள 52,637 கோடியையும் சேர்த்து மொத்தம் 1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.