டொனால்டு ட்ரம்பும் கிம் ஜோங் உன்னும் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்
ஹைலைட்ஸ்
- நேற்று சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தனர்
- இந்த சந்திப்பில் சுமூக தீர்வு எட்டப்பட்டது
- அணு ஆயுதங்களை கைவிடுவதாக, வட கொரியா அறிவித்துள்ளது
Honolulu: வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களை சந்தித்ததால், 'மிகப் பெரும் அணுப் பேரழிவு தவிர்க்கப்பட்டது' என்று கருத்து தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் நேற்று சிங்கப்பூரில் சந்தித்து அமைதிப் பாதையில் திரும்புவது குறித்து பேசினர். அப்போது இரு நாட்டுத் தலைவர்களும் ஒரு சுமூக முடிவுக்கு வந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதன்படி, வட கொரியா, இனி அணு ஆயுத தயாரிப்பிலோ சோதனைகளிலோ ஈடுபடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், கொரிய தீப கற்பத்தில் நிலைத்த அமைதி திரும்ப இரு நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதி பூண்டுள்ளன.
இந்நிலையில் கிம் உடனான சந்திப்புக்குப் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அணுப் பேரிழிவு நடப்பதில் இருந்து உலகம் காப்பற்றப்பட்டு இருக்கிறது. இனிமேல் ராக்கெட் லான்சர்கள், அணு ஆயுத சோதனைகள் அல்லது ஆய்வுகள் கிடையது. வட கொரியாவிலிருந்த பிணைக் கைதிகள் அவர்களின் குடும்பங்களிடம் திரும்பியுள்ளார்கள். சேர்மேன் கிம்முக்கு எனது நன்றிகள். நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட நேற்றைய நாள் வரலாற்றில் இடம் பிடிக்கும். வட கொரிய மக்களின் வளர்ச்சிக்காக முதல் அடியை எடுத்து வைத்ததற்காக அந்நாட்டு சேர்மேன் கிம்முக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக ஒரு அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் சந்தித்துக் கொண்டது, மாற்றம் சாத்தியமே என்பதை நிரூபிக்கிறது. அணு ஆயுதங்களை கைவிடுவதால், வட கொரியாவுக்கு வர்த்தக ரீதியிலும் உலக நாடுகளின் தொடர்புகள் மூலமும் கிடைக்கப் போவது மிக அதிகம். வட கொரிய நாட்டு மக்கள், சேர்மேன் கிம்மை, தங்களுக்கு பாதுகாப்பையும் வளர்ச்சியையும் அளித்த ஒப்பற்றத் தலைவர்களாக போற்றுவர்' என்று பதிவிட்டுள்ளார்.