‘தர்ஷன் (Tharshan) இல்லாத வீட்டில் என்னால் இருக்க முடியாது'
பிக் பாஸ் 3 (Bigg Boss 3) நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 6 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் 4 பேர் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டனர். இறுதியாக தர்ஷன் (Tharshan) எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார்.
இறுதி போட்டியில் முகேன், சாண்டி, லோஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் உள்ளனர். முகேன், ‘கோல்டன் டிக்கெட்' வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்றார். சனிக்கிழமை நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றப்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, நேற்றைய நிகழ்ச்சியின்போது 3 மெடல், ஸ்டோர் ரூமிலிருந்து எடுத்து வரப்பட்டது. அதில், முதலில் உள்ளதை சாண்டி அணிந்து கொண்டார். 2 ஆவது மெடலை ஷெரின், லோஸ்லியாவிற்கு வழங்கினார். இறுதியில், 3ஆவது மெடல் யாருக்கு வழங்கப்படும் என்பதில்தான் த்ரில் இருந்தது. இதற்கு தர்ஷன், ஷெரின் இடையில் போட்டி இருந்தது. இந்த நிலையில், ஷெரின் அந்த 3 ஆவது மெடலை எடுத்து, அவரே மாட்டிக்கொண்டார். இறுதியில் தர்ஷன் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசன் எவிக்ஷனில் தர்ஷன் பெயர் இடம்பெற்றிருந்ததை அனைவருக்கும் காண்பித்தார். அவராலேயும் இதை நம்ப முடியவில்லை. எல்லாமே மக்களின் தீர்ப்பு என்றார்.
இந்த முடிவை அறிந்ததும் ஷெரின் தன் கழுத்தில் மாட்டிய ஃபைனலிஸ்ட் மெடலை உடனே கழற்றி விட்டார். அதிகளவு உணர்ச்சிவசப்பட்டு அழுதார். ‘தர்ஷன் இல்லாத வீட்டில் என்னால் இருக்க முடியாது' என்று கூறி கதறி அழுதார்.
போட்டியாளர்கள் வெளியேறும்போது ஒவ்வொருவரும் தங்களின் பெயர் பதித்த மெடலை தாங்களே உடைத்துச் செல்ல வேண்டும். தர்ஷனும் அவ்வாறு உடைத்து விட்டுச் சென்றார். உடைந்த மெடலை ஷெரின் எடுத்து வைத்துக் கொண்டு, ‘தர்ஷனை விட, தான் எந்த வகையில் இறுதிப் போட்டி தகுதியானவள்' என்று தனக்குள்ளே கேள்வி கேட்டு அழுதபடி இருந்தார். ‘தர்ஷன் இல்லாத 7 நாட்கள் கடினமாகவே இருக்கும்' என்று கூறினார். லோஸ்லியாவும் தர்ஷன் வெளியேறுவதைக் கண்டு உடைந்து அழுதார். இப்படி இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க, மனக் குமுறல்களின் களமாக மாறியுள்ளது பிக் பாஸ்.