வனிதா, மீண்டும் தர்ஷன் – ஷெரின் உறவு பற்றி பேசி சண்டையை ஏற்படுத்திவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் 3 நாட்களில் முடிவடையப் போகிறது. 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சாண்டி, லோஸ்லியா, முகேன், ஷெரின் ஆகியோர் இறுதிப் போட்டி வரை வந்துள்ளனர்.
முதல் முறையாக பத்திரிகையாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர். சுபா, சுதிர், மீனாட்சி, அனுபமா, விஜய், சந்திரசேகர், பிரியங்கா, அதிதி என்று பிக் பாஸ் அவர்களை வரவேற்றார். ஒவ்வொருவரும் போட்டியாளர்களிடம் கேள்வியெழுப்பினர்.
முதலில், சாண்டியிடம் இதுவரை என்ன கற்றுக்கொண்டீர்கள், கற்றுக்கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சாண்டி, “குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நண்பர்கள், அண்ணன், தங்கை, அப்பா மகள், சித்தப்பா என்ற உறவு இந்த வீட்டில் இருந்தது. அவர்களை எல்லாம் பார்க்கும் போது, நான் வெளியில் இருந்ததைப் போன்று வீட்டில் இருந்ததே இல்லை எனப் புரிந்தது. அதனை தற்போது திருத்திக் கொண்டேன்” என்றார்.
லோஸ்லியா, “நான் வெளியில் சென்ற பிறகு முதலில் அப்பா, அம்மாவை சந்தித்துப் பேச வேண்டும். இதுவரை நான் எப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வாழ்ந்திருந்தேன் என்பது எனது பெற்றோர் வந்தபோது தெரிந்திருக்கும். நாங்கள் கஷ்டத்தில் இருக்கும்போது இப்போது பேசும் எந்த உறவும் வரவில்லை. ஏதேனும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால், என்னிடம் கேட்டுத்தான் எடுப்பார்கள்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்து பேசிய முகேன், “எனது வீட்டைத்தான் நான் இங்கு மிஸ் பண்ணியிருக்கிறேன். எதையும் இழக்கவில்லை. அதற்குப் பதிலாக நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொருவரிடமும் இருந்து ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும், அப்பாவைப் போன்று ஒரு பாடகராக வரவேண்டும். எனக்கும் நிறைய கைதட்டல்களும், பாராட்டுகளும் கிடைக்க வேண்டும். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை” என்று கூறியுள்ளார்.
“வனிதாவிற்கும் எனக்கும் சண்டை வந்த அந்த நாளை என்னால் மறக்க முடியாது. மற்றொன்று, தர்ஷன் வெளியில் சென்ற அந்த தருணத்தை மறக்கவே முடியாது,” என்றார் ஷெரின்.
போட்டியாளர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட பிறகு, அபிராமி, சாக்ஷி, வனிதா, கஸ்தூரி, சேரன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் கிஃப்ட் பாக்ஸ் உடன் வந்தனர். தங்களுக்குப் பிடித்தப் போட்டியாளர்களுக்கு வாங்கி வந்த கிஃப்ட் கொடுத்தனர்.
இறுதியில் வனிதா, மீண்டும் தர்ஷன் – ஷெரின் உறவு பற்றி பேசி சண்டையை ஏற்படுத்திவிட்டார்.
“தர்ஷன் மீது காதல் இருக்குன்னு சொன்னால் கூட ஏத்துக் கொண்டிருப்பேன். இருவருக்கும் இடையில் இருக்கும் காதல் சம்பந்தப்பட்ட உறவை அஃபையர் (affair) என்று எப்படி சொல்லலாம்,” எனக் கேட்கிறார் ஷெரின். இதற்கு எதிர்வினையாற்றிய வனிதா, "தர்ஷன் வெளியேறியதற்கு காரணம் நீ தான்" என்று குற்றம்சாட்ட மனம் உடைந்து அழுதார் ஷெரின்.
ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் வனிதா பேசியது தவறு என்றே கூறினர். இறுதியாக ஷெரினும் வனிதாவும் தனியாக பேசிக் கொள்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டனர்.