This Article is From Sep 25, 2019

Bigil Issue: நோட்டீசை திரும்ப பெற வேண்டும்: நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு!

Bigil Audio Launch Issue: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல, எதைக் கண்டாலும் அஞ்சுகிற நிலையில் அ.தி.மு.க-வினர் இருக்கிறார்கள். 

Advertisement
தமிழ்நாடு Edited by

தமிழக ஆட்சியாளர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - காங்கிரஸ் எச்சரிக்கை

பிகில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற கல்லூரிக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய விஜய், நிகழ்கால அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். சுபஸ்ரீ மரணம் போன்ற விவகாரங்கள் குறித்தும் பேசினார். தமிழக அரசுக்கு எதிராக பல கருத்துகளை கூறியதால் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே பிகில் ஆடியோ வெளியிட்டு விழாவுக்கு அனுமதி கொடுத்தது ஏன் என்றும், எந்த அடிப்படையில் திரைப்பட நிகழ்வுக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என உயர் கல்வித்துறை கேள்வி எழுப்பியிருந்தது. 

இந்நிலையில் பிகில் திரைப்பட நிகழ்ச்சி நடந்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

Advertisement

பிகில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளும் அ.தி.மு.க.வினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பிகில் திரைப்பட பாடல் நாடா வெளியீட்டு விழாவிற்கு அனுமதி வழங்கியதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு, அச்சுறுத்தலுக்கு கல்லூரி நிர்வாகம் இரையாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. கலைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். எனவே, இதைவிட ஜனநாயக விரோத, பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. 

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தவர் அல்ல. மாறாக, தமிழகத்தில் இருக்கிற லட்சக்கணக்கான இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு, போற்றப்படுகிற அற்புதமான ஓர் இளம் கலைஞர். இசை வெளியீட்டு விழாவில், அவரது உரையில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு அவர் பேசவில்லை. அவர் பொதுவாகப் பேசியதை ஆளும் அ.தி.மு.க-வினருக்கு எதிராகப் பேசியதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கற்பனையாகப் புரிந்து கொண்டு, நடிகர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல, எதைக் கண்டாலும் அஞ்சுகிற நிலையில் அ.தி.மு.க-வினர் இருக்கிறார்கள். 

Advertisement

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மாணவிகளிடையே உரையாற்ற அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக இதே தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. அன்று இச்செயலை அனைத்து எதிர்கட்சிகளும் வன்மையாக கண்டித்தன. அதேபோல, இன்றைக்கு நடிகர் விஜய் பங்கேற்ற ஒலி நாடா வெளியீட்டு விழா நடத்த அனுமதித்ததற்காக சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி திரும்பப் பெறவில்லை எனில் கடும் விளைவுகளை தமிழக ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement