Bigil Deepavali- @tamilrockers_co என்ற முகவரி கொண்ட ட்விட்டர் பக்கம், பிகில் திரைப்பட எச்.டி பிரின்ட் இருப்பதாக ஒரு ட்வீட் போட்டது
Bigil Deepavali- பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளியை (Deepavali) முன்னிட்டு விஜய் (Vijay) நடிப்பில் ‘பிகில்' (Bigil) திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 4,000 ஸ்கிரீன்களில் இந்தப் படம் வெளியாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில், முதல் சில நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. படத்தின் ஓப்பனிங் சீன், மாஸ் சண்டைக் காட்சிகள் உள்ளிட்டவை ஃபேஸ்புக், ஹலோ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதற்குள் கசிந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிகில் திரைப்படம், ‘தமிழ்ராக்கர்ஸ்' தளத்தில் வெளியாகியுள்ளதாக ஒரு பரபரப்புத் தகவல் வந்தது.
இது குறித்து ட்விட்டர் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களில் ஆராய்ந்தபோது, @tamilrockers_co என்ற முகவரி கொண்ட ட்விட்டர் பக்கம், பிகில் திரைப்பட எச்.டி பிரின்ட் இருப்பதாக ஒரு ட்வீட் போட்டது. தொடர்ந்து அதற்கான இணையதள லிங்கையும் பகிர்ந்தது அந்தப் பக்கம். ஆனால், அதில் உள்ளே சென்று பார்த்தால், ‘The URL has been blocked as per the instructions of the Competent Government Authority/ in compliance to the orders of Court of Law' என்ற தகவல் மட்டுமே வருகிறது. விசாரித்தது பார்த்ததில், அந்தப் பக்கத்தில் பிகில் படம் பதிவேற்றப்பட்டதாகவும், பின்னர் அது அரசு சார்பில் தடை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை எந்த தளத்திலும் பிகில் படம் வெளியிடப்படவில்லை. திரையரங்குகளில் மட்டுமே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நேற்று வரை, பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு சிக்கல் நிலவிய சூழலில், இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறும்போது, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பெரும் சர்ச்சைகளை கடந்து இன்று அதிகாலை திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிகில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன. இதனைக் காண திரையரங்குகளுக்கு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என பிகில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.