This Article is From Oct 03, 2019

Falls Into River: வெள்ள பாதிப்பு ஆய்வு: படகு கவிழ்ந்து ஆற்றில் விழுந்த பாஜக எம்.பி!

பாட்னாவின் பாடாலிபுத்ரா தொகுதியின் எம்.பியாக இரண்டு முறை தேர்வானவர் ராம் கிரிபால் யாதவ். இவர், பாட்னாவின் கிராமப்பகுதியான தனாருவா பகுதியில் ஆய்வு செய்து திரும்பி வரும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் மக்களால் ராம் கிரிபால் மீட்கப்பட்டார்

Patna:

பாட்னாவில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்.பி படகு கவிழந்து ஆற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாட்னாவில் தனது மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. ராம் கிரிபால் யாதவ், தற்காலிக அமைக்கப்பட்ட படகு ஒன்றில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற படகு தண்ணீரில் கவிழ்ந்தது. 

இதைத்தொடர்ந்து, உள்ளூர் மக்கள் சிலர் உடனடியாக தண்ணீரில் குதித்து அவரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தை சுற்றி இருந்த மக்கள் தங்களது மொபைல்களில் வீடியோவாக எடுத்துள்ளனர். 

பாட்னாவின் பாடாலிபுத்ரா தொகுதியின் எம்.பியாக இரண்டு முறை தேர்வானவர் ராம் கிரிபால் யாதவ். இவர், பாட்னாவின் கிராமப்பகுதியான தனாருவா பகுதியில் ஆய்வு செய்து திரும்பி வரும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆற்றை கடந்து, அவர் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மூங்கில் கம்புகள், டயர்கள், டூயூப்புகள் கட்டப்பட்ட தற்காலிக படகு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த படகில் அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். 

அப்போதே எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, உள்ளூர் மக்கள் உடனடியாக அவரை, தண்ணீரில் குதித்து மீட்டனர். பின்னர் அவருக்கு தங்களது தோள்களில் இருந்த துண்டுகளை கொண்டு விசிறி விட்டு, அவரை ஆசுவாசப்படுத்தினர். 

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு கிரிபால் யாதவ் அளித்த பேட்டியில், பாட்னாவில் மட்டுமே மாநில நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. அவர்கள் கிராமங்களை கணக்கில் கொள்வதில்லை. கால்நடைகள் திவனம் இல்லாமல் உயிரிழந்து வருகிறது. 

எனக்கு கூட படகுகள் கிடைக்கவில்லை. நானே வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட தற்காலிகமாக அமைக்கப்பட்ட படகுகளை தான் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு யாதவின் மகள் மிசா பாரதியை தோற்கடித்தவர் ராம் கிரிபால் யாதவ். அதே தொகுதியில் மீண்டும் இந்தமுறையும் வெற்றி பெற்றுள்ளார். 

பிகாரில் பெய்து வரும் கன மழை, மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இவற்றால் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிகாரின் பாட்னா நகரில் 80 சதவீத வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. சுமார் 21.45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாட்னாவில் கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை சுமார் 342.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. 

With inputs from ANI, PTI

.