டவுசர் அணிந்த நிலையில் மீட்கப்பட்ட துணை முதல்வர் சுஷில் மோடி
Patna: பீகாரில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் துணை முதல்வர் சுஷில் மோடியும் சிக்கிக் கொண்டார். குடும்பத்தினருடன் வீட்டில் தவித்த அவரை பேரிடர் மீட்பு படையினர் மீட்டெடுத்தனர். டவுசர் அணிந்திருக்கும் நிலையில் அவர் இருக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதில் தற்போது வரையில் 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
தலைநகர் பாட்னா உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அளித்துள்ள தகவலின்படி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது சொந்த வீடுகளை விட்டு விட்டு வேறு இடத்திற்கு மாறியுள்ளனர்.
வெள்ள பாதிப்பில், துணை முதல்வர் சுஷில் மோடி தனது குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டார். பாட்னாவில் அவரது வீட்டை சுற்றிலும் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்திருந்தது. இததொடர்பாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், துணை முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டெடுத்தனர்.
மீட்கப்பட்டபோது துணை முதல்வர் டவுசரும்ம, டீ ஷர்ட்டும் அணிந்திருந்தார். அந்த போட்டோக்கள் தற்போது வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
பீகாரின் பக்கத்து மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. இங்கு கனமழை வெள்ளத்திற்கு 87 பேர் பலியாகி உள்ளனர்.