பீகாரில் வரும் செவ்வாய்கிழமை வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patna: பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த சில நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் கடும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக பாட்னாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகள் மார்பளவு தண்ணீரில் மூழ்கியதால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்பு படகுகளின் மூலம் வெளியே அழைத்து வரப்பட்டனர். "வானிலை துறை கூட துல்லியமற்றதாக தோன்றுகிறது, வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு கணிப்புகளை செய்கிறது" என்று முதல்வர் நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். பீகாரின் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் கடந்த ஐந்து நாட்களில் பெய்த மழையால் 87 பேர் உயிரிழந்தனர்.
பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், நகரத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான ராஜேந்திர நகர் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உடன் வந்த அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
பாட்னாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை அளிப்பதற்கு பீகார் அரசு இரண்டு ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையிடம் கேட்டுள்ளது.
மாநில தலைநகரில் இன்று காலை, மழை பெய்யாமல் இருந்து வருவது சிறிது நிவாரணத்தை அளித்துள்ளது. மீட்பு படகுகள் தவிர, பொதுவாக பயன்படுத்தப்படும் நகராட்சி கிரேன்களும் மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பீகாரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் படையினர் (என்.டி.ஆர்.எஃப்) 19 குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கனமழை காரணமாக, சாலைகளில் மிகப் பெரிய அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் சேவையும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாட்னாவின் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசாங்க அதிகாரிகளுக்கு விடுமுறை கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
உத்தரபிரதேசத்தில் பல்லியா, வாரணாசி, ஜான்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்லியாவில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் மழை நீர் நுழைந்ததைத் தொடர்ந்து சிறையில் உள்ள 950 கைதிகளில் 500 பேர் வேறு சிறைக்கு மாற்றப்படுகிறார்கள்.