பீகாரில் வரும் வியாழக் கிழமை வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- Patna-வில் 3 நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது
- வியாழக் கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
- மருத்துவமனைகளில் வெள்ள நீர் புகுந்துள்ள வீடியோக்கள் வெளியாகியுள்ளன
Patna: பீகார் (Bihar) மாநில பாட்னாவில் (Patna) கடந்த 3 நாட்களாக விடாமல் பெய்து வரும் மழையால் (Heavy rain), வீடு, மருத்துவமனைகளில் மழை நீர் புகுந்துள்ளது. இந்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கானோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 பிரிவுகள் தொடர்ந்து பாட்னா நகரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாட்னாவில் தெருக்களில் படகுகள் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வருகின்றன.
பீகாரின் பல மாவட்டங்களிலும் மழை நீரால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, பீகாரில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். பாட்னாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள பல அரசு மருத்துவமனைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. பாட்னாவில் இருக்கும் மிகப் பெரிய பொது மருத்துவமனையான நலந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் மழை நீர் புகுந்துள்ளது.
இந்த கனமழை காரணமாக, சாலைகளில் மிகப் பெரிய அளவுக்கு டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. ரயில் வண்டி சேவையும் பல இடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாட்னாவின் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
பீகாரைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயி, பாட்னா கனமழை குறித்து ட்விட்டர் மூலம் கவலை தெரிவித்திருந்தார்.
பாட்னாவில் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்பது இதற்கு முன்னர் பார்த்திடாதவாறு உள்ளதாக NDTV-யிடம் பல நகரவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார், வெள்ள பாதிப்பு குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பீகாரில் வரும் வியாழக் கிழமை வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.