New Delhi: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தல் வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கும் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் இன்றைய கூட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்குபவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் கத்துவாவில் நடந்த சம்பவமும், உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தையும் கொண்டு இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த இரு சம்பவங்களும் நாட்டையும், மக்களின் மனசாட்சியையும் பெரிதும் பாதித்துள்ளன.
அதனால், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகள் கட்டுப்படுத்தப்படும்.
தூக்கு தண்டனை மட்டுமில்லாது, சிறைத்தண்டனையும் 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகவும், ஆயுள் தண்டனையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.