Bengaluru: பெங்களூரு: கர்நாடக பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் அறிமுகமாகும் திட்டம் குறித்த பேசிய பயோகான் தலைவர் கிரண் மசும்தாருக்கும், கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் சித்தராமையாவுக்கும் ட்விட்டரில் மோதல் வெடித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள 1,000 தொடக்க பள்ளிகளில், அறிமுகம் செய்யப் படவிருக்கும் நிலையில், ஆங்கிலத்திற்கு பதில் தாய்மொழியை ஊக்குவிக்க வேண்டும் என கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழியை விடுத்து, தாய் மொழி கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ம்ன்னிறுத்தி கர்நாடக முதல்வரை சந்திக்க அவர் முடிவெடுத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் எச்.எஸ் துரைசுவாமி, எழுத்தாளர்கள் சந்திரசேகர் கம்பர், சந்திரசேகர் பாடில் மற்றும் சிதனந்தமூர்த்தி ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதனை எதிர்த்து, பயோகான் தலைவர் கிரண் மசும்தார் ஷா தனது ட்விட்டரில், “கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளைப் பற்றி கவலைப்படாதவர்களை ‘சமூக ஆர்வலர்கள்’ என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன” என்று பதிவிட்டிருந்தார்.
கிரண் ஷா கூறிய கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி சித்தராமையா, இந்த கருத்துக்கு கிரண் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளார்
இதற்கு பதிலளித்த கிரண் ஷா, “சிறப்பான வேலை வாய்ப்புகளுக்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையுமே மாணவர்கள் கற்க வேண்டும் என்ற எனது கருத்தின் பொருளை திரித்து பேச வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
“வேலை வாய்ப்புகளினால் கல்வியை சமன் செய்ய முடியாது. உங்களை போன்றவர்கள் அரசு பள்ளி குழந்தைகளுக்கு தேவையற்ற ஆங்கில ஆசையை வளர்த்துள்ளீர்கள்” எனவும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். மேலும், கன்னட மொழி வளர்ச்சிக்கு கர்நாடக அரசு போதுமான ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.