பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோ-பிக் திரைப்படம் எடுக்கப்பட உள்ளது. ‘பி.எம் நரேந்திர மோடி' என்கிற பெயருடன் எடுக்கப்பட உள்ள இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மோடியாக திரையில் வலம் வர உள்ளார்.
இது குறித்து பிரபல திரைப்படத் துறை வல்லுநர் தரண் ஆதர்ஷ், ‘நரேந்திர மோடி குறித்தான பயோ-பிக் திரைப்படத்தில் விவேக் ஓபராய்தான், கதாநாயகனாக நடிக்க உள்ளார். வரும் 7 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் வெளியாகும். ஓமங் குமார் படத்தை இயக்க உள்ளார். இந்த மாதமே படப்பிடிப்பு தொடங்கும்' என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஓமங் குமார் இதற்கு முன்னர் இரண்டு பயோ-பிக் படங்களான ‘மேரி கோம்' மற்றும் ‘சர்ப்ஜித்' ஆகியவையை இயக்கியுள்ளார். குஜராத், டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.