This Article is From Jul 28, 2018

அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு: முன்ஜாமின் கோரி வினோத மனு!

நீதிபதி ஜகதீஷ் சந்திராவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது

Advertisement
நகரங்கள் Posted by

சென்னையில் இருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த மற்றும் அங்கு வேலை பார்த்து வந்த 17 பேரை கைது செய்துள்ளது காவல் துறை. தொடர்ந்து அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தானும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, முன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார் ஒரு நபர்.

மதுரை, பங்கஜம் காலனியில் வசித்து வரும் காமராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘அயனாவரத்தைச் சேர்ந்த சிறுமியின் வழக்கு குறித்து கேள்விப்பட்டேன். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளேன். மது போதையில் இருந்த போது அப்படிச்  செய்தேன். எனவே, சிறுமி வழக்கில் என்னையும் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், எனக்கு முன் ஜாமின் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதி ஜகதீஷ் சந்திராவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் யாரும் வாதாட ஆஜராகவில்லை. இதையடுத்து மனுதாரருக்கு எதிராக வாதாடிய அரசு வழக்கறிஞர், ‘இந்த வழக்கில் மனுதாரர் காமராஜ் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அதற்கான ஆதாரத்தையும் அவர் கொடுக்கவில்லை. எனவே, அவரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரினார்.

Advertisement

இதையடுத்து நீதிபதி சந்திரா, ‘இந்த வழக்கு விசாரணையை வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன். அப்போதும் மனுதாரர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை என்றால், வழக்கை தள்ளுபடி செய்துவிடுவேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement