CAA Protest - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act) எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சில இடங்களில் இணைய மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், சிறிய அமைப்புகள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தன்னெழுத்தியான குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தது. அதற்கு ஆதரவு தெரிவிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan) எம்பி அங்கு வந்தார். அப்போது அவருக்குக் கூட்டத்தில் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேச அனுமதித்தமைக்கு நன்றி கூறி தனது பேச்சை ஆரம்பித்த திருமா, “இன்று நம் பிரச்னை இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கிடையாது. உற்று கவனித்தால் தெரியும், பாஜக அரசு, தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருவது. முதலில் முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள், பின்னர் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த 370வது சட்டப் பிரிவை நீக்கினார்கள், தொடர்ந்து என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாமில் அமல் செய்தார்கள், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் அதாவது சிஏஏ.
இது ஒன்றும் இன்றைய, நேற்றைய திட்டமல்ல. சங் பரிவார் கும்பல், பல்லாண்டு காலமாக இத்திட்டத்தை வரையறுத்து வருகின்றன. சங் பரிவார கும்பலின் முன்னோடி கோல்வால்கர், எப்படி முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட வேண்டும், எப்படி இந்து ராஷ்டிரம் அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி தெளிவாக திட்டம் தீட்டி வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறார். அதை இன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து அமல் செய்கிறது அரசு.
மேற்கு வங்கம், கேரளா, டெல்லி, பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தங்கள் மாநிலங்களில் அமல் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தன்னெழுத்தியான போராட்டங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. இந்தப் போராட்டங்களால் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசும், தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் செய்ய முடியாது என்று நிலைப்பாட்டை எடுக்க வைக்க வேண்டும். அதுவரை நாம் ஓயக்கூடாது.
உண்மையில் பாஜகவுக்கும் சங் பரிவார கும்பலுக்கும் முஸ்லிம்கள் குறியல்ல. அவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய வெறுப்பு, அரசியல் சட்ட சாசனத்தின் மீதுதான். சட்ட சாசனம்தான் நமக்கு மதச்சார்பின்மையை வழங்கி, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கித் தந்துள்ளது. அதைத் தகர்த்தெறிந்து இந்து ராஷ்டிரத்தை அமைப்பதுதான் பாஜகவின் நோக்கம். அதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். நாம் போராடுவது சட்ட சாசனத்தைக் காக்க. இந்த நாடு பிளவுபடுவதைக் காக்க…” என்று முழங்கினார். கரகோஷங்களுக்கு மத்தியில் திருமாவளவனின் பேச்சு நிறைவு பெற்றது.