ரஃபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு வெளிப்படைத் தன்மை இல்லை என்று சிவசேனா கூறியுள்ளது.
New Delhi: ரஃபேல் விவகாரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா பாஜகவுக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ளது. ரஃபேல் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது சிவசேனா கட்சி உறுப்பினர் அரவிந்த் சாவந்த் பேசுகையில், ''வெளிப்படைத் தன்மை குறித்து பாஜக தொடர்ந்து பேசி வருகிறது. அப்படி இருக்கையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவதற்கு பாஜக மறுப்பது ஏன்?.
நாங்கள் நல்லாட்சி வழங்குகிறோம். ஊழல் கிடையாது என்று கூறும் பாஜக அரசு ரஃபேல் விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த சம்மதிக்க வேண்டும். ரஃபேல் போர் விமானம் தேவைதான். ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட விதம் மோசமாக இருக்கிறது என்று மக்கள் பேசுகின்றனர்.
ரஃபேல் விவகாரம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார். ஆனால் குழப்பம்தான் நீடித்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒருபோதும் சொல்லவில்லை'' என்றார்.