பாஜக அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, முக்தர் அப்பாஸ் நக்வி, மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்திடம், ராகுல் காந்தியின் நேர்காணல் நகலுடன் புகார் கொடுத்துள்ளனர்
New Delhi: ஐதராபாத்தைச் சேர்ந்த ஆங்கில செய்தித் தாள் ஒன்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நேர்காணல் ஒன்றை வெளியிட்டது. இதையடுத்து பாஜக தரப்பு, ‘இது பணம் கொடுத்து போட்ட நேர்காணல் செய்தி. எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் கொடுத்துள்ளது.
பாஜக அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, முக்தர் அப்பாஸ் நக்வி, மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தியின் நேர்காணல் நகலுடன் புகார் கொடுத்துள்ளனர். அளிக்கப்பட்டப் புகாரில், ‘பணம் கொடுத்து செய்தி வரவழைப்பதற்கு, ராகுல் காந்தியின் நேர்காணல் ஒரு சிறந்த உதாரணம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் அளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நக்வி, ‘தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு ஒரு நாள் முன்னர், ராகுல் காந்தியின் பேட்டி ஒரு செய்தித் தாளில் வருகிறது. வாக்காளர்களைக் கவரவே இதைப் போன்ற ஒரு செயலில் அவர் ஈடுபட்டுள்ளார். இது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது.
தேர்தல் நடப்பதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர், இதைப் போன்ற நேர்காணல்கள் வெளியிடப்படக் கூடாது என்று விதிமுறை உள்ளது. அதை அவர் மீறியுள்ளார். தேர்தல் ஆணையம் அவருக்கு எதிராகவும், காங்கிரஸுக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.