This Article is From Nov 26, 2019

பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!!

உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக மகாராஷ்டிரா எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இன்று இரவு 9 மணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Maharashtra: கடந்த சனிக்கிழமையன்று தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.

Mumbai:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி பாஜகவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் 105 எம்எல்ஏக்களும் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, பிற்பகல் 3.30 மணி அளவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்கிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ராவ் சாகேப் தான்வே, எங்களது பெரும்பான்மையை இன்று இரவு 9 மணிக்கு நிரூபிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன. 

இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

இதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனிடையே, நேற்றைய தினம் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது 162 எம்எல்ஏக்களுடன் மும்பை நட்சித்திர விடுதியில் அணிவகுப்பு நடத்திய நிலையில், அதேபோல், பாஜகவும் எம்எல்ஏக்கள் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

.