இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்களது கட்சி விவகாரங்களில் பாஜகவினர் தலையிடுவது தவறு, அதேபோல், அவர்களது கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்.
உறவு என்பது வேறு, மத்திய அரசும், மாநில அரசும் நல்ல உறவுமுறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்கள் அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். திராவிட கட்சிகள் தமிழத்தில் இனி இருக்காது என்கிறார்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?
இது ஊழல் கட்சி என்கிறார்கள், அமித்ஷா வருகையின் போது கூட, தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது என்றார். அப்படி என்றால் அதை ஏற்றுக்கொண்டு மெளனமாக இருக்க முடியுமா?
பொன்.ராதாகிருஷ்ணன் பலமுறை பேசும்போது எங்களை பார்த்து இது செயல்படாத அரசு என்கிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதற்கும் மெளனமாக இருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களின் சந்திப்பின்போது, பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரை மக்களவை சபாநாயகராக தொடர்வது ஏன்? அதிமுகவில் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் தம்பிதுரை இல்லையே. அவர் அப்படி முடிவில் இருக்கு போது எதற்காக சபாநாயகர் பதவியை தொடர்கிறார் என்பது தெரியவில்லை.
அதிமுகவில் விரக்தியடைந்த மனநிலையில் அவர் பேசுகிறார் என்று நினைக்கிறேன். தம்பிதுரை தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் அதனால், இது குறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.