கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற உறுப்பினர்களில் 106 பேரின் ஆதரவு பாஜக-வுக்கு உள்ளது.
Bengaluru: கர்நாடகாவில் (Karnataka) ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் (Congress - BJD) கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்தது, அக்கட்சிகளில் இருந்து, அதிருப்தி தெரிவித்து வெளியேறிய 17 எம்எல்ஏ-க்கள். அவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய சட்டசபை சபாநாயகர், 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுகுக விரைவில் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் 13 கட்சித் தாவியவர்களுக்கே சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
17 அதிருப்தி எம்எல்ஏ-க்களால் கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு. இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏ-க்கள் மற்றும் மஜத-வைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சட்டமன்ற சபாநாயகர். தகுதி நீக்கம் செய்தபோது, வரும் 2023 ஆம் ஆண்டு வரை தேர்தலில் நிற்பதற்கும் எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில், தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள போதும், தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற உறுப்பினர்களில் 106 பேரின் ஆதரவு பாஜக-வுக்கு உள்ளது. காங்கிரஸ் - மஜதவுக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக இடைத் தேர்தலில், குறைந்தபட்சம் 6 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் தங்களை அதிகாரபூர்வமாக பாஜக-வில் இணைத்துக் கொண்டனர். இது தொடர்பாக பேசியுள்ள எடியூரப்பா, “அந்த 17 பேரின் தியாகத்தினால்தான் நான் இன்று முதல்வராக இருக்கிறேன். தற்போது முதல்வராக நான் உறுதியளிக்கிறேன். கட்சித் தாவிய 17 பேருக்கும் என்ன சத்தியம் செய்யப்படதோ அதை நிறைவேற்றுவேன்.
வருகின்ற இடைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். முன்னாள் எம்எல்ஏ-க்கள், அதே நேரத்தில் வருங்கால எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.