தமிழக பாஜக-வின் முக்கிய நிர்வாகியும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் பாஜக வெகுவாக வளர்ந்துள்ளது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘2014 ஆம் ஆண்டு இருந்ததை விட, பாஜக தமிழகத்தில் பன்மடங்கு வளர்ந்துள்ளது. தொடர்ந்து கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
2019 ஆம் ஆண்டு தேர்தலை அனைத்துக் கட்சிகளும் கூட்டணி வைத்து சந்திக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கின்றன. பாஜக-வும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் எந்தக் கட்சியோடும் ஒட்டித்தான் போக வேண்டும் என்ற ஏக்கத்தில் பாஜக இல்லை. எங்களுடன் சம உணரவுடன் யார் வருகிறார்களோ, அவர்களுடன் மட்டும்தான் கூட்டணி வைப்போம்' என்று உறுதிபட கூறியுள்ளார்.
நேற்று கூட்டணி குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், ‘பாஜகதேர்தலுக்காக கூட்டணி அமைப்பது நிச்சயம். எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்குள் இருக்கும் என்று இப்போதுசொல்ல முடியாது. ஜனவரி முதல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைத் தொடங்கப்படும். திமுக - காங்கிரஸ்கூட்டணியைவிட எங்கள் கூட்டணி மிகவும் வலிமையானதாக இருக்கும்' என்று கூறினார்.