தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பாஜக மாநாடு நடைபெறும் இடங்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், வருகிற 27ஆம் தேதி நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து 2 லட்சம் தொண்டர்கள், பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தயாராக உள்ளனர்.
பாஜக தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பூத் மற்றும் கிராம அளவில் பாஜகவுக்கு மிகப்பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூடும் முதல் கூட்டம் என்பதால் பெரும் வரவேற்பு உள்ளது.
பாஜக-அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என ராமதாஸ் அத்வாலே கூறியது அவருடைய சொந்த கருத்து. பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.