காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு எதிராக தமிழக அரசு, சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் இது குறித்து மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை, ‘லோக்சபா தேர்தல் வரவுள்ளதை மனதில் வைத்துக் கொண்டுதான் மத்தியில் ஆளும் பாஜக அரசு, மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி கொடுத்துள்ளது. அதிமுக-வின் கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த வித பதிலும் இல்லை' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தையொட்டி, அதிமுக எம்.பி-க்கள் மக்களவையில் நேற்று அமளி செய்தனர். இதையடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.