இந்த முறை எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணி சேரவில்லை. அடுத்த மாதம் 7 ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடக்கிறது.
Hyderabad: தெலங்கானாவில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அறிவித்துள்ளது.
அதன்படி, ‘மாநிலத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா-வை அறிமுகப்படுத்துவது, சமஸ்கிரத பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது, ஐடி ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவது, மதுபான விற்பனையை முறைபடுத்துவது, 1 லட்சம் பசுக்களை ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்குக் கொடுப்பது, சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு இலவசமாக பயணங்கள் ஏற்பாடு செய்வது' உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து தெரியபடுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து பாஜக-வின் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்கும் கமிட்டியின் தலைவர் பிரபாகர், ‘யோகா என்பதை இந்துத்துவ அடையாளத்துடன் பார்க்கக் கூடாது. யோகா மனித ஆரோக்கியத்துக்கு நல்லது. கூடிய சீக்கிரம் வாக்குறுதிகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று' தெரிவித்துள்ளார்.
பிரபாகர் மேலும், ‘தெலங்கானாவில் பெரும் அளவிலான ஐடி ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களை பணியிலிருந்து திடீரென நீக்குவது, அவர்கள் வாங்கி வரும் சம்பளத்தை திடீரென குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எதேச்சதிகார போக்குகளில் நிறுவனங்கள் எடுக்கின்றன. இதற்கு முடிவுகட்டும் நோக்கில் எங்கள் வாக்குறுதி இருக்கும்' என்று கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியது. இந்த முறை எந்தக் கட்சியுடனும் பாஜக கூட்டணி சேரவில்லை. அடுத்த மாதம் 7 ஆம் தேதி தெலங்கானாவில் தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 11 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.