வைகோவை விட இந்திய ஒருமைப்பாட்டில் பாஜகவுக்கு அக்கறை அதிகம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தலை மனதில் வைத்து கர்நாடகாவிற்கு அணைகட்ட மத்திய அரசு அனுமதி வழங்கினால், இந்திய ஒருமைப்பாடு என்கிற அணை உடைந்தே போகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறும்போது, நதிநீர் பங்கீடு பிரச்சினையில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு மிக கவனமாக உள்ளது. எனவே பிரிவினையை பேசி அரசியல் செய்ய முற்பட வேண்டாம்.
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்திய ஒருமைப்பாட்டில் மத்திய அரசிற்கு அதிக அக்கறை உள்ளதால் அதை பற்றி வைகோ கவலைப்பட வேண்டாம்.
பிரிவினையை பேசியே அரசியல் லாபம் பெற்றவர் வைகோ. ஆனால், ஒற்றுமையாக எல்லா மாநிலமும் சகோதரத்துவத்துடனும், எந்த பிரச்சனையும் இல்லாமல் நதி நீரை பங்கிடுவது தான் பாஜகவின் நோக்கம். அதனால், மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்ட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.