Jitendra Singh: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் ஜிதேந்திரா சிங் பேசியுள்ளார்.
New Delhi: அம்மாவும் மகனும் பேசி முடிவெடுக்க பாஜக ஒன்றும் சமையலறை கட்சியல்ல என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் (Jitendra Singh) கூறியுள்ளார்.
மக்களவையில் ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேருவிடம் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்து பேசியதாவது-
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததற்கு பாஜக காரணம் அல்ல. ஏனென்றால் பாஜக முன்வந்து ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தெரிவிக்கவில்லை.
உடன்பாடு இல்லாவிட்டாலும் பிடிபி கட்சியுடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சியை அமைத்தோம். ஏனென்றால் மக்கள் எங்கள் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை அளித்திருந்தனர். நாங்கள் ஆட்சி அமைக்காதிருந்தால் மக்கள் எங்களை குற்றம் சுமத்தியிருப்பார்கள்.
ஜம்மு காஷ்மீரில் பிரச்னை தீவிரம் அடைந்ததற்கு முன்பு ஆட்சி செய்த கட்சிகளே காரணம். அந்த கட்சிகள் செய்த அடிமுட்டாள்தனமான செயல்களால்தான் காஷ்மீர் பற்றியெறிந்து கொண்டிருக்கிறது.
காஷ்மீர் விவகாரத்தில் படேலுடைய முயற்சிகளில் நேரு தலையிடாமல் இருந்திருந்தால் இப்போது நிலைமை வேறு மாதிரியாக சென்றிருக்கும். தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அம்மாவும் மகனும் சாப்பிடும்போது பேசி முடிவு எடுக்க பாஜக ஒன்றும் சமையலறை கட்சி அல்ல. ஜம்மு காஷ்மீரை 50 ஆண்டுகளாக சீரழித்தவர்கள்தான் இப்போது தேர்தலை எதிர்க்கின்றனர். இவ்வாறு ஜிதேந்திரா சிங் பேசினார்.