தேஷ்முக்கின் தொகுதி வித்ராபா பகுதியில் இருக்கிறது
Mumbai: மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர், ஆஷிஷ் தேஷ்முக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த அடுத்த நாள் ‘ரஃபேல் ஊழலின் காரணமாகப் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என அறிவித்துள்ளார்.
நேற்று, சட்டமன்ற சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஆஷிஷ் தேஷ்முக் அளித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜக-வில் சேர்ந்து வித்ராபா பகுதியில் உள்ள கதோல் தொகுதியில் பாஜக-வின் சார்பாக போட்டியிட்டு வென்றார் தேஷ்முக். இந்நிலையில், தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என தேஷ்முக்கின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன்கிழமை விளக்க அறிக்கை வெளியிட்ட தேஷ்முக், “பாஜக-வின் மேக்-இன்-இந்தியா திட்டம், மேக்னடிக் மகாராஷ்டிரா திட்டம், ஸ்கில் இந்தியா என எந்தத் திட்டமும் பயனளிக்கவில்லை. கூடுதலாக ரஃபேல் ஒப்பந்தத்தில் பெரிய ஊழலே நடந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தியுடன் நடந்த சந்திப்புக் குறித்து தேஷ்முக் கூறுகையில், “இளைஞர்கள் அவர் மீது அதீத எதிர்பார்ப்புகள் கொண்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் சட்டமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதற்குள் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதைத் தவிர்க்கவேண்டி இதுவரையில் தேஷ்முக்கின் ராஜினாமா கடிதத்தை கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.