This Article is From Aug 07, 2019

“இப்போ அழகான காஷ்மீர் பெண்ணைக் கட்டிக்கோங்க…”- உ.பி பாஜக எம்.எல்.ஏ பகீர் பேச்சு!

"நமது கட்சியில் இருக்கும் முஸ்லிம் தொண்டர்களுக்கு இந்த முடிவு கூடுதல் சந்தோஷமானது. இனி அவர்கள் அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்"

“இப்போ அழகான காஷ்மீர் பெண்ணைக் கட்டிக்கோங்க…”- உ.பி பாஜக எம்.எல்.ஏ பகீர் பேச்சு!

“பாஜக அரசின் நடவடிக்கையால் இனி கட்சித் தொண்டர்கள் காஷ்மீருக்கு சென்று நிலம் வாங்கலாம், திருமணம் செய்து கொள்ளலாம்"

Muzaffarnagar:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர், கட்சித் தொண்டர்கள் முன்னர், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும்போது, “இனி நீங்கள் காஷ்மீரைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்” என்று பேசி அதிர்ச்சி கிளப்பியுள்ளார். 

பாஜக-வின் விக்ரம் சயினி எம்.எல்.ஏ சர்ச்சையாக பேசுவது புதியதல்ல. ஆனால், காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது அவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

“பாஜக அரசின் நடவடிக்கையால் இனி கட்சித் தொண்டர்கள் காஷ்மீருக்கு சென்று நிலம் வாங்கலாம், திருமணம் செய்து கொள்ளலாம்…

பாஜக தொண்டர்களுக்கு இந்த முடிவு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகாதவர்கள், அங்கு சென்று இனி மணமுடித்துக் கொள்ளலாம். அதில் இனி எந்தப் பிரச்னையும் இருக்காது. முன்னர் பெண்களுக்கு எதிராக பல்வேறு கொடுமைகள் செய்யப்பட்டு வந்தன. காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவரின் மாநிலக் குடியுரிமை ரத்து செய்யப்படும். இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் வெவ்வேறு குடியுரிமைகள் இருந்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. 

நமது கட்சியில் இருக்கும் முஸ்லிம் தொண்டர்களுக்கு இந்த முடிவு கூடுதல் சந்தோஷமானது. இனி அவர்கள் அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். காஷ்மீர் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவை மொத்த நாடும் கொண்டாட வேண்டும்” என்று சயினி பேசும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது, “இனி காஷ்மீர் பெண்களை எந்தவிதப் பிரச்னையுமின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னேன். அது உண்மைதானே. இது காஷ்மீர் மக்களுக்குக் கிடைத்த சுதந்திரமாகும். மோடிஜி எங்களது கனவை நிறைவேற்றியுள்ளார். மொத்த நாடும் அவரின் நடவடிக்கையைக் கொண்டாடுகிறது” என்று தெரிவித்தார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில், பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய சயினி, “இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் உணர்பவர்கள் மற்றும் தேச துரோகிகள், இங்கு இருக்கத் தகுதியற்றவர்கள். எனக்கு ஒரு அமைச்சகப் பொறுப்பைத் தாருங்கள், அப்படி பேசுவோரை வெடிகுண்டு வைத்துக் கொன்றுவிடுகிறேன்” எனப் பேசி சலசலப்பை ஏற்படுத்தினார். 

.