This Article is From Oct 26, 2018

‘மீண்டும் சீட் வழங்கப்படுமா..?’- ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கவலை!

சமீபத்தில் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

‘மீண்டும் சீட் வழங்கப்படுமா..?’- ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கவலை!

ராஜஸ்தானில் மொத்தம் இருக்கும் 200 தொகுதிகளில் கடந்த முறை பாஜக, 163 இடங்களைக் கைப்பற்றியது

Jaipur:

சமீபத்தில் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. அதில், பல எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. எனவே, ராஜஸ்தானிலும் இந்த நடவடிக்கை தொடரும் என்று கூறப்படுகிறது. 

இன்னும் ராஜஸ்தானில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. சத்தீஸ்கரில் தேர்தல் முடிந்த பிறகு தான் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் பாஜக-வைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், தற்போது பதவி வகித்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு மீண்டும் சீட் வழங்கப்படாமல் போகலாம் என்று யூகங்களை சொல்லி வருகின்றனர். 

ராஜஸ்தானில் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசுக்கு எதிரான மனநிலை இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், கிட்டத்தட்ட 80 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படாது எனப்படுகிறது. ராஜஸ்தானில் மொத்தம் இருக்கும் 200 தொகுதிகளில் கடந்த முறை பாஜக, 163 இடங்களைக் கைப்பற்றியது. இந்த முறை அங்கு காங்கிரஸ் தான் தேர்தலை வென்று ஆட்சியில் அமரும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கையை பாஜக எடுக்கும் என்று கூறப்படுகிறது. 

ராஜஸ்தான் பாஜக வட்டாரம், ‘பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த முறை தொகுதி ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்கின்றனர். அதேபோல, தொகுதியையும் மாற்றிக் கொடுக்குமாறும் அவர்கள் கேட்கின்றனர்' என்று தகவல் தெரிவித்துள்ளது. இது இந்த முறை சாத்தியப்படாது என்று பாஜக-வின் முக்கிய புள்ளிகள் கூறுகின்றனர்.

ராஜஸ்தான் பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளர், பிரகாஷ் ஜவடேகர் இந்த விவகாரம் குறித்து, ‘வேட்பாளர் பட்டியல் முதலில் வெளியிடப்பட வேண்டும். நாங்கள் வேட்பாளர்களை மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், தொகுதி மாற்றி கொடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை' என்று தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில், தற்போது எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் நபர்களுக்கு சீட் மறுக்கப்பட்டால், அவர்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் ராஜஸ்தான் மாநில பாஜக தீவிர ஆலோசனையில் இருக்கிறது.  


 

.