This Article is From Oct 13, 2018

“பெண் பத்திரிகையாளர்கள் எல்லாம் அப்பாவிகள் கிடையாது”- பாஜக தலைவர் கருத்தால் சர்ச்சை

#MeToo விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் ஒருவர், பெண் பத்திரிகையாளர்கள் எல்லாம் அப்பாவிகள் கிடையாது என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது

Advertisement
இந்தியா Posted by (with inputs from ANI)

மத்திய பிரதேச பாஜகவின் மகளிர் பிரிவு தலைவர் லதா கேல்கர்.

Bhopal:

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து “நானும் பாதிக்கப்பட்டேன்” என பொருள்படும் #MeToo என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த #MeToo பிரசாரம் இணைய தளங்களில் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த பிரசாரத்தில் மத்திய வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், மூத்த இந்தி நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் அக்பர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். முன்பு மூத்த பத்திரிகையாளராக இருந்த அக்பர் தற்போது வெளியுறவு இணை அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச பாஜக மகளிர் அணியின் தலைவர் லதா கேல்கர் அளித்தள்ள பேட்டியில், பெண் பத்திரிகையாளர்களை அப்பாவிகள் என்று நாம் கருத முடியாது. அக்பர் விவகாரத்தில் அவர்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அக்பர் மீதான குற்றச்சாட்டு குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட எவரும் கருத்து தெரிவிக்கவில்லை. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி மட்டும், அக்பர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

Advertisement
Advertisement