பாஜக-வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றம் குறித்து அவமதிப்பாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், அவரை 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இருக்கும் கோயிலில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடத்தில் கலந்து கொள்ள எச்.ராஜா சென்றிருந்தார். அப்போது அவர் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் தரக்குறைவாக பேசினார். அவர் பேசியது வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது.

இந்நிலையில் அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ராஜா, ‘நீதிமன்றம் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கோபத்தில் அப்படி பேசிவிட்டேன். உணர்ச்சி வேகத்தில் கூறிய கருத்து வருந்துகிறேன்' என்று வருத்தம் தெரிவித்தார். முன்னர் வீடியோ குறித்து பேசிய ராஜா, ‘நான் ஒன்றும் அப்படி பேசவில்லை. அது போலியானது' என்று மறுத்து வந்தார்.