'பாஜக செல்வாக்கை இழந்து விட்டது'' என்று 5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரஜினிகாந்த அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-
பாஜகவுக்கு பெரிய பின்னடைவு. மக்களிடையே பாஜகவுக்கு இருந்த செல்வாக்கு குறைந்து விட்டது என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. மக்களிடையே பாஜக செல்வாக்கு இழந்திருக்கிறது. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு மோடிக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன. இதுபற்றி ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் 10 அணிகள் ஒன்றிணைந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்பதை புரிந்து கொள்ளலாம் என பதில்
அளித்தார். மோடி பலசாலி என்பதை இந்த பதில் மூலம் ரஜினி மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
இந்த நிலையில், முதன்முறையாக பாஜகவை விமர்சித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். நாளை அவரது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் சென்னையில் இருக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.